×

மனிதநேயமிக்க நற்செயல்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

 

நாகப்பட்டினம், ஜூலை 27: மனிதநேயமிக்க நற்செயல்களுக்கான ஒன்றிய அரசின் ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சாரம் தாக்கி இறத்தல், நிலச்சரிவுகள், விலங்குத் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படும் மனிதநேயமிக்க நற்செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக மீட்பாளருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது மூன்று பிரிவுகளை கொண்டது (சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜுவன் ரக்ஷா பதக்) மேலும் உயிர் காக்கும் செயல் நிகழ்த்தப்பட்ட தேதி 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி-க்கு பின்னர் இருத்தல் வேண்டும். இந்த விருதிற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் – 202ல் பெற்றுகொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பத்தாரரின் சுயவிவரம் அதிகபட்சம் 250 சொற்களுக்குள் சம்பவ விவர அறிக்கை இடம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பவம் நடைபெற்ற வரிசை, மீட்பாளரின் தைரியம், துணிச்சல், உடனடி செயல்பாடு, உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து மற்றும் அவர் ஆற்றிய குறிப்பிட்ட பங்களிப்பு ஆகியவை தெளிவாக இடம்பெற வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி முழு விபரங்களுடன் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags : Nagapattinam Collector ,Nagapattinam ,Union Government ,Nagapattinam District ,Collector ,Praveen Kumar… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...