×

சீலப்பாடி பைபாஸ் பகுதியில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் தேவை: பொதுமக்கள் கோரிக்கை

 

திண்டுக்கல் ஜூலை 27: திண்டுக்கல் நகரின் விரிவாக்கத்தால் சீலப்பாடி பைபாஸ் பகுதி கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் போலீஸ் டிஐஜி. அலுவலகம், ஆயுதப்படை மைதானம் உள்ளது. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சீலப்பாடி பைபாஸிலிருந்து, திண்டுக்கல் நகர் பகுதிக்கு வருவதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டும்.

மேலும், இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இதில் கனரக லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையைக் கடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரை பணயம் வைத்து சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது: சீலப்பாடி பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாநகருக்குள் செல்கின்றனர். இதனால் பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையைக் கடக்கும் போது விபத்தும் ஏற்படுகிறது. ஆகையால் நகருக்குள் செல்லும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அப்போது போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொது மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு சீலப்பாடி பைபாஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Tags : Seelapadi Bypass ,Dindigul ,DIG ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...