×

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஜூலை 27: விருதுநகர் மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்கும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை மாதந்தோறும் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் பிளஸ் 2, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம், பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரூ.600ம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி உதவித்தொகை பெற பட்டியலின மற்றும் பழங்குடியினர் 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். கல்வி தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெறலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற கல்வி தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750ம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் வழங்கப்படும். வருமான உச்ச வரம்பு கிடையாது. 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறலாம். வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உதவித்தொகை பெற விழைவோர் தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. மேலும், அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. உதவித்தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Virudhunagar district ,Virudhunagar ,Virudhunagar District Employment Office ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...