×

ஜிம்பாப்வேயுடன் 2வது டி20 90 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா: இஷான், திலக் அதிரடி

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டி20 போட்டியில் 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் அஷோக் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் யஷ் தாகூர் அறிமுகமானார்.

வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் ஷர்மா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 8 ரன்னில் வெளியேற, வைபவ் 20 ரன் எடுத்து (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இந்தியா 3 ஓவரில் 29 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், இஷான் கிஷன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 66 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 25 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இஷான் திலக் வர்மா இணைந்து அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது. இஷான் 31 பந்தில் அரை சதம் அடித்தார்.

இருவரும் 4வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்து அசத்தினர். இஷான் 81 ரன் (44 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். திலக் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. திலக் வர்மா 60 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் துபே 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் முஸரபானி, என்காரவா, எவன்ஸ், நியூமன், பென்னெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.5 ஓவரில் 129 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. பிரையன் பென்னெட் அதிகபட்சமாக 32 ரன் எடுக்க, மருமானி 24, ரியான் பர்ல் 20, பிராட் எவன்ஸ் 19 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.

பிரின்ஸ் யாதவ் 1.2 ஓவர் மட்டுமே பந்துவீசி 2 விக்கெட் கைப்பற்றிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அந்த ஓவரை நிறைவு செய்தார். கடைசி கட்டத்தில் பந்துவீசிய அபிஷேக் ஷர்மா 2.5 ஓவரில் 17 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். யஷ் தாகூர் 2, பிஷ்னோய், திலக், துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் வென்ற முதல் தொடராக இது அமைந்தது. இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது.

Tags : India ,Zimbabwe ,Ishan ,Tilak ,Harare ,Harare Sports Club ,
× RELATED 2வது டி20: ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள்...