×

ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்: பணியில் ஈடுபடும் 1069 பேருக்கு 10,690 உபகரணங்கள் வழங்கல்

 

பெரம்பலூர், ஜூலை 20: கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஆம் ஆண்டிற்கான பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வீடுதோறும் களப்பணிகள் நடைபெறவுள்ளது. வீடு தேடி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு அனைத்து பொதுமக்களும் உரிய முழுஒத்துழைப்பும் கணக்கெடுப்பிற்குத் தேவையான விவரங்களை வழங்கி பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவிடுமாறு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வரும்பொழுது கட்டிட எண், வீட்டு எண், வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டுக் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலைமை, குடும்ப எண், வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை, குடும்ப தலைவரின் பெயர், குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவர் எஸ்சி, எஸ்டி, மற்ற பிரிவைச் சேர்ந்தவரா, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிப்பிட வசதியின் வகை, கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் எல்பிஜி/ பிஎன்ஜி இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப் படும் பிரதான எரிபொருள், வானொலி, ட்ரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி, கணினி, தொலைபேசி, கைப்பேசி, ஸ்மார்ட் போன், மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மொபைல், கார், ஜீப், வேன், குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம், செல்போன் நம்பர் ஆகிய 33 கேள்விகளுக்கு வீட்டில் உள்ளோர் புள்ளி விவரங்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

இந்த பணிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் ஜூலை 17முதல் 31ஆம்தேதிவரை, சுய கணக்கெடுப்பு பணிகளை, அதாவது தனிநபர் மூலமாக < http://census.gov.in/ > என்ற இணையதளத்தில் தங்களின் குடும்ப விவரத்தை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்து, அதன் பதிவு எண்ணை மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் களப்பணியாளர் தங்கள் வீடு தேடி வரும்போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி கேட்டுக் கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், லெப்பைக் குடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய 4 பேரூராட்சிகள், 121 ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 894 தெருக்களில் ஆகஸ்டுமாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 915 களப் பணியாளர்கள், 154 சூப்பர்வைசர்கள் என மொத்தம் 1069 பேர்களுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், 4தாலுகா அளவில், பூலாம்பாடி பேரூராட்சி என 7 இடங்களில் 3கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பயிற்சி முடிவடைந்த உடன் களப் பணியாளர்களுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் மாதிரி கணக்கெடுக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்கள், சூப்பர்வைஸர்கள் ஆகியோருக்கு வெயிலில் தெருத்தெருவாக செல்லும் போது, பாதுகாப்புக்காக தலைக்குத் தொப்பி, கணக்கெடுப்புக்குத் தேவையான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரை கையேடு, ஊர் மக்களுக்கு வந்திருப்பது யாரென தெரிந்து கொள்ளும் விதமாக ஐடென்டி கார்டு, 2-பேனாக்கள், ஸ்பைரல் நோட்டு, 2 பென்சில்கள், ரப்பர், கிளிப்புகள், அட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட உபகரணங்கள், அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள ஏதுவாக ஹேண்ட் பேக் ஆகியவை 1069 பேர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவை பயிற்சி முடிக்கப்பட்ட களப் பணியாளர்களுக்கும் சூப்பர்வைசர்களுக்கும் பணிகள் தொடங்கும் முன்பாக வழங்கப்பட்டு வருகிறது.

 

Tags : Perambalur ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...