×

வார விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

 

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கும்போது தரிசன வரிசையில் பக்தர்களுக்கு கூட்டம் காணப்பட்டது. படிப்படியாக காலை 9 மணியளவில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோடை வெயில் முடிந்தும் திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அதன் காரணமாக சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நீர்மோர் மற்றும் குடி தண்ணீர் வழங்கப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு நேரங்களில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பகல் நேரங்களில் சாலைகளில் அதிக அளவில் வெப்பம் காணப்படுவதால் தற்போது இரவு நேரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் சன்னதிகளில் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் வெகுவாக காணப்பட்டது.

 

 

Tags : Annamalaiyar temple ,Tiruvannamalai ,Lord Shiva ,Tiruvannamalai Annamalaiyar temple ,
× RELATED 200 ஜெலட்டின் குச்சிகள் கடத்திய...