சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க நீர்மட்டம் 2 அடி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சென்னை அடுத்த பூண்டி கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 1939 முதல் 1944ம் காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் சென்னை மாநகர முன்னாள் மேயர் சத்தியமூர்த்தி பெயரால் உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை மாநகர மக்களின் பெரும்பாலான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 2 அடி நீர்மட்டம் உயர்த்துவதற்காக 1991ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணி 1997ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு 2 அடி உயர்த்தும் பணி முடிக்கப்பட்டது. இதனால் நீர் இருப்பு 2 அடி உயர்ந்தது. மேலும் நீர்த்தேக்கம் நிரம்பினால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறும் வகையில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கத்தில் 3231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் 35 அடி உயரத்தில் 3458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் – ஆந்திர மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டு பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பிறகு இணைப்பு கால்வாய்கள் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் கடந்த 2022ம் ஆண்டு 656 மில்லியன் கன அடியாகவும், கடந்த 2023ம் ஆண்டு 2082 மில்லியன் கன அடியாகவும், கடந்த 2024ம் ஆண்டு வெறும் 90 மில்லியன் கன அடியாகவும் மட்டுமே இருப்பு இருந்தது. அதேபோல் கடந்த 2025ம் ஆண்டு 1400 மில்லியன் கன நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2024ம் ஆண்டு குறைவாக இருந்தது போல் பூண்டி நீர்த்தேக்கத்தில் வெறும் 994 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் மீன்பிடிக்க முடியாமல் வறுமையில் வாடி வரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டத்தை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்துவதற்கு ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. 2 அடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கூடுதலாக 739 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். ஏற்கனவே நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இருந்து 3970 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க ஏதுவாக இருக்கும். எனவே உடனடியாக அரசு கிடப்பில் போடப்பட்டுள்ள 2 அடி உயர்த்தும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சென்னை மாநகர எல்லையை விரிவாக்கம் செய்து வருவதால், மக்கள் தொகை அடிப்படையில் கணக்கீடு செய்தால், தோராயமாக 20 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் 2050ம் ஆண்டு பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தோராயமாக ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மக்கள் கணக்கிடப்பட்டால், மக்கள் தொகை 1.71 கோடியாக உயருவதன் காரணமாகவும், எல்லை விரிவாக்கம் காரணமாகவும், தோராயமாக 30 டிஎம்சி தண்ணீருக்கு குறையாமல் தேவைப்படும்.
இதை கருத்தில் கொண்டே, பூண்டி நீர்த்தேக்கத்தினை கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் ஏற்கனவே 1991 – 1996ல் உயர்த்தப்பட்டு, உயரம் 35 அடி அளவில் உள்ளது. எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, பூண்டி நீர்த்தேக்கத்தினை 2 அடி உயர்த்துவதால், தண்ணீர் அளவு 0.78 மில்லியன் கன அடி கூடுதலாகி சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாகும். மேலும், பூண்டி நீர்த்தேக்கத்தினை 2 அடி உயர்த்துவதன் மூலம், எவ்வித நில எடுப்பும் தேவை இல்லை. நில உரிமைதாரர்களுக்கும் எதிர்காலத்தில் கூடுதல் தொகை வழங்கும் நிலை இல்லை. இதன் மூலம் தண்ணீர் பற்றாகுறையினை சீர் செய்ய இயலும்.
இந்நிலையில் சென்னை மாநகர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை போன்ற 5 நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த 5 நீர்த்தேக்கங்களில் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் முழுமையாக சேமித்து வைக்கப்படும் அளவிற்கு நீர்த்தேக்கங்கள் இருந்தாலும் தற்போது 5437 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
நகரமயமாக்களால் சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் இருந்த ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய, பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் நீர் சேமிப்பிற்கும், மாநகராட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல ஒரு செயற்கையான தோற்றம் உருவாகியுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் இது போன்ற கிராமப் பகுதிகளில் உள்ள ஏரிகளை நம்பி மாநகராட்சி பகுதி மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக 210 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 256 கன அடியாக அதிகரித்துள்ளது.3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,690 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 12.86 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது.
ஏரிகளில் நீர் இருப்பு
பூண்டி ஏரியின் 35 அடி மொத்த உயரத்தில் 26.04 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 994 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 285 கன அடி நீர் வருகிறது. இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக அனுப்பப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 19.02 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,368 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 12.86 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 1,690 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 256 கனஅடி, சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 174 கன அடி செல்கிறது.
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 1.44 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 90 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.
கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 30.04 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 295 மில்லியன் கன அடி. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 6 கன அடி தண்ணீர் செல்கிறது.
