×

கடும் நிதி நெருக்கடியில் சிஎம்டிஏ; ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.200 கோடி கேட்டு அரசுக்கு கடிதம்: பொறுப்புகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க திட்டம்

சென்னை: ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.200 கோடி உதவி கேட்டு அரசுக்கு சிஎம்டிஏ கடிதம் எழுதியுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (சிஎம்டிஏ), தனது 50 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கடுமையான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து, முற்றிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தன்னாட்சி பெற்று, அரசு நிதியுதவி இல்லாமல் சுயநிதி அமைப்பாக திறம்படச் செயல்பட்டு வந்த இந்த முக்கிய நகர திட்டமிடல் நிறுவனம், தற்போதைய தவெக அரசின் மோசமான நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் இல்லாத செயல்பாடுகளால் அரசிடம் கையேந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

வழக்கமாக மனை மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி கட்டணங்கள் மற்றும் இதர உள்நாட்டு வருவாய்களை மட்டுமே முதன்மையாக நம்பி, 1972ம் ஆண்டு முதல் அரசிடம் இருந்து எந்தவொரு மானியமும் பெறாமல் லாபகரமாக இயங்கி வந்த இந்த தன்னாட்சி அமைப்பு, புதிய அரசின் கீழ் கடுமையான நிதி ஆதாரங்கள் இன்றி தவிப்பது தவெக அரசின் நிர்வாக திறமையின்மையையே காட்டுவதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சிஎம்டிஏவின் உறுப்பினர் கூறியதாவது;
சிஎம்டிஏ வரலாற்றில் முதன்முறையாக இந்த நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது. மேலும், வரும் ஆண்டுகளில் இதுபோன்ற சூழலை தவிர்க்க, கட்டுமானப் பணிகளைச் சிஎம்டிஏ மேற்கொள்ளாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்கப் பணிகள் கைமாற்றப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாக மட்டுமே செயல்பட வேண்டிய சிஎம்டிஏ, கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது முக்கியப் பணியைத் தாண்டி, சுமார் ரூ.3,000 கோடி செலவில் நூலகங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற பெரிய அளவிலான பொதுக் கட்டுமான திட்டங்களை முன்னெடுத்து நிதிச் சுமையைக் கூட்டிக்கொண்டது. இத்தகைய திட்டங்களைக் கண்காணிப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ சிஎம்டிஏவிடம் போதிய உள்கட்டமைப்போ அல்லது தனி அமைப்புகளோ இல்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி அல்லது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளிடம் எந்தவித வருவாயும் இன்றி இலவசமாக ஒப்படைக்கப்படுகின்றன. அரசின் இந்த தெளிவற்ற மற்றும் திட்டமிடலற்ற போக்கினால் நிறுவனத்தின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து, ஒட்டுமொத்தப் பொறுப்புகளும் கடன்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

தற்போது ஊழியர்களின் மாதச் சம்பளம் மற்றும் இதர உடனடி செயல்பாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்குக்கூடச் சிஎம்டிஏவிடம் பணம் இல்லை. இதனால் சுமார் ரூ.200 கோடி அவசர நிதியுதவி மற்றும் மானியம் வழங்குமாறு அரசிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தவெக அரசு இந்த கோரிக்கைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது. அதே வேளையில், பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள் உள்பட சிஎம்டிஏவின் ஒட்டுமொத்தக் கடன் பொறுப்புகள் தற்போது சுமார் ரூ.3,500 கோடி என்ற பிரமாண்ட அளவை எட்டி திவால் நிலைக்குச் சென்றுள்ளது.

தற்போதைய அரசின் நிதிப் பற்றாக்குறையால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல புதிய உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, முற்றிலும் கைவிடப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது சென்னையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தவெக அரசுத் தரப்பில் இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கமும், அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படாமல் மவுனம் காக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகரப் பகுதிக்கான முதன்மை நகர திட்டமிடல் முகமையான இதன் வரம்பிற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள், சென்னை மாநகராட்சி, இதர நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வருகின்றன. இவ்வளவு பெரிய பரப்பளவை நிர்வகிக்கும் ஒரு முக்கிய அமைப்பு, தற்போதைய தவெக அரசின் கீழ் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அன்றாடப் பணிகளையும், நகர்ப்புற வளர்ச்சியையும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : CMDA ,Chennai ,Chennai Metropolitan Development Agency ,
× RELATED மருத்துவமனையில் லாலு பிரசாத்