×

பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம்: சார்பதிவாளர், நிலம் வாங்கியவர்கள் வீடு உள்பட 15 இடங்களில் சோதனை; சிபிசிஐடியிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

பழநி: பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரத்தில் சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர்களின் வீடுகள் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பழநி கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது அடிவாரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். துறைரீதியான நடவடிக்கையாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. 2வது நாளான நேற்று முன்தினம் 5 அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பதிவு நடந்த பழநி சார்பதிவாளர் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 3வது நாளான நேற்று திண்டுக்கல் ரவுண்டானா ரோடு, லிங்கா அவென்யூ பகுதியில் வசித்து வரும் பழநி சார்பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில், டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஜஸ்டின் மணிகண்டன் இல்லை. அவரது மனைவி, 2 குழந்தைகள், மாமனார், மாமியார் இருந்தனர். அங்கு 5 மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்கேனர், ஜெராக்ஸ் காபி எடுக்கும் மிஷின் வரவழைக்கப்பட்டது. இதில் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆவணங்கள், வங்கி கணக்கு பரிவர்த்தனை, செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். வீட்டில் சிக்கிய ஆவணங்களை ஸ்கேனர் மூலம் பதிவேற்றம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து பிரச்னைக்குரிய நிலத்தை வாங்கிய பழநி அருகே டிகேஎன் புதூர் கிராமத்தில் உள்ள சேதுபதியின் வீட்டிலும், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே பாப்பன்குளத்தில் உள்ள வெள்ளத்துரையின் வீட்டிலும் நேற்று அதிகாலையிலேயே சிபிசிஐடி போலீசார் அதிரடியாக நுழைந்தனர். ஆனால், வீட்டில் இருவரும் இல்லை. சேதுபதியின் வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், அவரது மனைவி ருக்மணியிடம் சேதுபதியின் தொழில் தொடர்பாகவும், குடும்ப உறுப்பினர்கள், வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த செல்போன் மற்றும் சில ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

வெள்ளத்துரை தரப்பில் கோவையில் வசித்து வந்த அவரது மகனான சுஜித்தை வரவழைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் சோதனை மேற்கொண்டு சில ஆவணங்களை எடுத்து சென்றனர். இதுபோல் பத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்டதாக கூறி பழநி டவுன், குரும்பபட்டியில் உள்ள லட்சுமணன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் லட்சுமணன் இல்லை. இதை தொடர்ந்து அவரது வீட்டிலும், இடும்பன் கோயில் படிப்பாதை அருகே உள்ள அவரது குளிர்பான கடையிலும் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், அவரது மனைவியிடம் லட்சுமணனை, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சென்றனர். ெதாடர்ந்து பழநி அருகே மற்றொரு சாட்சி கையெழுத்திட்ட பொன்னாபுரத்தை சேர்ந்த மயில்சாமி என்பவரது வீட்டிற்கும் சோதனைக்காக சென்றனர். ஆனால், வீடு பூட்டி கிடந்ததால் திரும்பி சென்றனர்.

இதுபோல் 1888ல் பிரச்னைக்குரிய இடத்தை தண்டபாணி சுவாமிகளுக்கு கைங்கர்யங்கள் செய்வதற்காக வழங்கிய பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த குப்புச்சாமி மணியக்காரர் குடும்பத்தினர் வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணைக்காக சென்றனர். அங்கு சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான மூலப்பத்திரங்கள் உள்பட வேறு ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர். ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம் தொடர்பாக நேற்று 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில முறைகேடு ஆவணங்களை தயாரித்தவர் வீட்டில் சோதனை
ஒட்டன்சத்திரத்தில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பரும், நில புரோக்கருமான ஜெயபிரகாஷ் என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஜெயபிரகாஷ் தான் இந்த விவகாரத்தில் ஆவணங்களை தயார் செய்து கொடுத்தவர் ஆவார். மேலும் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த ஒரு ஆண்டாக ஒட்டன்சத்திரம் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தான் பணி மாறுதலாகி சென்றுள்ளார். ஒட்டன்சத்திரத்தில் பணிபுரிந்த காலத்தில் பதிவு செய்த ஆவணங்களை உரிய காலத்தில் கொடுக்காமல் கள ஆய்வு என்ற பெயரில் மாதக்கணக்கில் இழுத்தடிப்பு செய்து இடைத்தரகர்கள் மூலம் பேரம் பேசி பதிவு செய்த ஆவணங்களை கொடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை தவெக நிர்வாகி உள்பட 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பதிவு செய்ததில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன் (46), நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்த டெக்கரேஷன் தொழில் செய்து வரும் சண்முகசுந்தரம் (43) மற்றும் நெல்லை டவுன் சம்பந்தர் தெருவைச் சேர்ந்த சிவகுமார் (41) ஆகியோருக்கு இந்த மோசடி பத்திரப் பதிவில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பாளை விஎம் சத்திரம், நெல்லை டவுன் உள்ளிட்ட மூன்று இடங்களில் சிபிசிஐடி போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து சென்று நேற்று சோதனை நடத்தினர். காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணி வரை சண்முகசுந்தரத்திடமும், சிவகுமார், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய பாளை வி.எம். சத்திரம் திருவள்ளுவர்நகரில் உள்ள குமரகுருபரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சண்முகசுந்தரம், சிவகுமார், குமரகுருபரன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் பெருமாள்புரம் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளதாகவும், இதில் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான முழுமையான விசாரணை நடத்தியபின் அதிகாரப்பூர்வ பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளை இடம் மாற்றி மாவட்ட பதிவாளர் தலையீடு
பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பாலசுந்தர் ஆகிய 2 பேர் பத்திரப்பதிவு செய்ததில் எந்த வகையான தொடர்பில் உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான விபரம் வருமாறு:
பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் ஜே-1, சார்பதிவாளர் ஜே-2 என்ற அலுவலகங்கள் உள்ளன. தவிர, மாவட்ட பதிவாளர் (பொ), மாவட்ட பதிவாளர் (தணிக்கை), சார்பதிவாளர் (சிட் மற்றும் சங்கங்கள்) போன்ற அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் கடந்த ஜூன் 30ம் தேதி முன்பு துறைரீதியான பணிமாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அன்றைய நிலவரப்படி ஜே-2 வில் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ், ஒட்டன்சத்திரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஜே-1ல் பணிபுரிந்து வந்த பழனிச்சாமி, ஜே-2க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

காலியாக உள்ள ஜே-1ன் சார்பதிவாளர் பணியிடத்திற்கு திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி நியமிக்கப்பட்டார். ஆனால், ஈஸ்வரி பணிக்கு வராமல் விடுப்பில் இருந்து வருகிறார். இதனால் காலியாக உள்ள ஜே-1ன் பணியிடத்திற்கு ஜே-2ல் சார்பதிவாளருக்கு உதவியாளராக உள்ள பாலசுந்தர் பொறுப்பு அதிகாரியாக மாவட்ட பதிவாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜே-1ன் சார்பதிவாளராக பொறுப்பேற்ற பாலசுந்தர் கடந்த ஜூலை 3ம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தின் பத்திரப்பதிவிற்கான கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், கையெழுத்து போடுதல், பத்திரப்பதிவிற்கான தொகை பரிமாற்றங்களை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார். ஆனால், பதிவேட்டில் நிலுவை ஆவணம் என பதிவு செய்து விடுகிறார்.

ஜூலை 4, 5 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாகும். இதை தொடர்ந்து ஜூலை 6ம் தேதி பாலசுந்தர் விடுப்பில் சென்று விடுகிறார். இதையடுத்து சிட் மற்றும் சங்கங்கள் பதிவு சார்பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் ஜே-1 சார்பதிவாளராக மாவட்ட பதிவாளர் சசிகலாவால் நியமிக்கப்படுகிறார். பொறுப்பேற்ற ஜஸ்டின் மணிகண்டன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எனக்கூறி நிலுவை ஆவணத்திற்கு எண் வழங்கி விடுகிறார். எண் வழங்கப்பட்டதை தொடர்ந்து பத்திரம் உயிர்பெற்று விடுகிறது. இந்நிலையில் விடுப்பில் சென்ற பாலசுந்தர், மாவட்ட பதிவாளர் சசிகலாவால், சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன்படி பத்திரப்பதிவு செய்ததில் சார்பதிவாளர்களை விட மாவட்ட பதிவாளர் சசிகலாவின் தலையீடு முக்கியமானதாக உள்ளது தெரிகிறது. எனவே, சிபிசிஐடி போலீசார் மாவட்ட பதிவாளர் சசிகலாவிடம் நடத்தும் விசாரணையின் மூலம் பத்திரப்பதிவு முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்ற விபரங்கள் தெரியவருமென பரபரப்பாக பேசப்படுகிறது.

அறக்கட்டளை நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை
சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தலைமையில் 3 ஜீப்களில் 15க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றும் பழநி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். நேற்று சனிக்கிழமை என்றாலும், அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வர சொல்லி உள்ளனர். பணியில் இருந்த ஊழியர்களிடம் பத்திரப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வுகளை தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர். ஊழியர்களின் வாக்குமூலங்கள் அனைத்தும் கேமராவால் பதிவு செய்யப்பட்டன. 6 மணிநேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் அறக்கட்டளை நிர்வாகிகள் 7 பேரின் வீடுகளிலும் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags : CBCID ,Palani ,Dandapani ,Andavan Park Road, Palani, Dindigul district… ,
× RELATED மருத்துவமனையில் லாலு பிரசாத்