×

கொளத்தூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.97,000 மோசடி; 2 பேர் கைது

 

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் ராமமூர்த்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர்குமார் (62). கொளத்தூர் ஏரிக்கரை தெரு பகுதியில் கடந்த 35 வருடமாக அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 2 வருடமாக கார்த்திகா என்ற பெண் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11ம்தேதி ஈஸ்வர்குமார் மருத்துவ சிகிச்சைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, மதியம் ஒரு மணி அளவில் இவரது அடகு கடைக்கு வந்த பிரகாஷ் என்பவர், ஒன்றரை சவரன் பிரேஸ்லெட்டை அடகுவைத்து 97 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அடகு கடையில் இருந்த கார்த்திகா, கடை உரிமையாளரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவர் கூறியதன் அடிப்படையில் 97 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இரவு 9 மணிக்கு கடை உரிமையாளர் ஈஸ்வர் குமார் அடகு கடைக்கு வந்து பிரேஸ்லெட்டை சோதனை செய்தபோது, போலி நகை என்பது தெரியவந்தது. அதிர்ச்சிடைந்த ஈஸ்வர்குமார், இதுகுறித்து கொளத்தூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இன்று காலை பெரம்பூர் ரமணாநகர் கௌதமபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (28), இன்பரசு (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள், பிரகாஷ் என்ற பெயரில் ஆதார் கார்டு தயார் செய்து அடகு கடை உள்ள பகுதியில் வசிப்பவர்போல ஏமாற்றி, கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் போலி நகைகளை கொடுத்து பணம் வாங்கி பல கடைகளில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kolathur ,Perambur ,Easwar Kumar ,Ramamoorthy Colony ,Thiruvik Nagar, Chennai ,Kolathur Lake Street ,Karthika ,
× RELATED சிங்கம்புணரி அருகே பெண் டாக்டர் மர்மசாவு