×

ரூ.14.79 கோடியில் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பூங்கா ரயில் நிலையம் இன்று திறப்பு: பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்

சென்னை: ரூ.14.79 கோடியில் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள சென்னை பூங்கா ரயில் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 261 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 75 மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 75 ரயில் நிலையங்களை பிரதமர் தோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

சென்னை பூங்கா ரயில் நிலையம், ரூ.14.79 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணி, 1928ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1931 மே 11ம் தேதி அதிகாரப்பூர்வமாக பூங்கா ரயில் நிலையம் திறக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்து எளிய புறநகர் ரயில் நிலையமாக இருந்த பூங்கா ரயில் நிலையம், தற்போது நாளொன்றுக்கு 198 புறநகர் ரயில்களையும், 29,000 பயணிகளையும் கையாளும் தென்னிந்தியாவின் மிக முக்கியமான பல்முனைய போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம், மிகப்பெரிய புதிய நுழைவாயில் முகப்பு மேற்கூரையுடனும், சென்னை மாநகரத்தின் புதிய எழில்மிகு அடையாள கோபுரத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிலையத்திற்குள் எளிதாக வழி கண்டறியும் வகையில், நவீன மற்றும் தெளிவாகத் தெரியக்கூடிய தகவல் பலகைகள் நிலையம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

ரயில் நிலையத்தின் உட்பகுதியில், காத்திருப்புப் பகுதிகளுடன் கூடிய புதிய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், நடைமேடைகளில் சீரமைக்கப்பட்ட தரைத்தளம், கூடுதல் நடைமேடை மேற்கூரைகள் மற்றும் நிலையத்தின் ஒட்டுமொத்த மேற்கூரைகளும் புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தடையற்ற பல்முனைய போக்குவரத்தை உறுதி செய்ய, நடை மேம்பாலத்தில் இரண்டு புதிய மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பறக்கும் ரயில் நிலைய நடைமேடைகளை நேரடியாக இணைக்கும் பிரத்யேக நடைபாதைகளும், மெட்ரோ ரயில் பாதையை எளிதாக அடைய சுரங்கப்பாதை வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மின்தூக்கிகள், பிரத்யேக நடைபாதைகள் மற்றும் தெளிவான தகவல் பலகைகள் ஆகியவற்றின் மூலம், பயணிகள் வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையே எவ்வித தடையுமின்றி எளிதாக மாறி பயணிக்க முடியும். இது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பெரிதளவில் உதவியாக இருக்கும்.

Tags : Park Railway Station ,Modi ,Chennai ,Chennai Park Railway Station ,Union Government ,
× RELATED தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில்...