- பழனி கோயில்
- அய்கோர்ட்
- மதுரை
- ஐகோர்ட் கிளை
- பழனி தண்டபனி சுவாமிகல் மடம்
- திண்டுக்கல் மாவட்டம்
- பழனி
- ஆதிவரம்
- ஆண்டன்
மதுரை: பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாக விற்ற விவகாரத்தில், தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம், ஆண்டன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி. இந்த இடமானது பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த குப்புசாமி மணியக்காரர் என்பவரால் தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளை பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கான கைங்கர்யங்கள் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது. இந்த இடத்தை தண்டபாணி ஐயா என்பவர் விற்பனை செய்ய முற்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறை மூலம் பழநி கோயில் இணை ஆணையர் மடத்தின் தக்காராக நியமிக்கப்பட்டார். இந்த இடத்தை பாதுகாக்கும் விதமாக கடந்த 2025, செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக இலவச வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த நிலத்திற்கு தக்காராக பழநி கோயில் இணை ஆணையரே இருக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன.
இந்த இடம் திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் தனிநபர்கள் 2 பேரின் பெயர்களில் ரூ.2 கோடிக்கு கடந்த 6ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்றவர்களான வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மீது மோசடி ஆவணம் தயாரித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை துறைரீதியாக சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை தனி நீதிபதியிடம் தனியார் தரப்பில் உண்மை தகவல்களை மறைத்து அனுமதி உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் தக்கார் சார்பில் ஐகோர்ட் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இணை ஆணையர், தண்டபாணி சுவாமிகள் மடத்தின் தக்கார் ஆக அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டார். மடத்திற்குச் சொந்தமான பழநி அடிவாரம், சன்னதி வீதியில் உள்ள 1.35 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள், ஒரு தனியார் அறக்கட்டளையிடமிருந்து வாங்கியதாகக் கூறி, அந்த கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்ய பழநி சார்பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி தனி நீதிபதியிடம் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சார்பதிவாளர் பத்திரத்தை பதிவு செய்ய அனுமதித்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தந்து மனுதாரர்கள், தனி நீதிபதியிடம் இந்த உத்தரவை பெற்றுள்ளனர். இந்த நிலத்தின் சட்டப்பூர்வமான உடைமை மற்றும் நிர்வாகம், மடத்தின் தக்காரான பழநி கோயில் நிர்வாக அதிகாரியிடமே உள்ளது. வழக்கில் முக்கிய தரப்பான தக்காரை, ஒரு எதிர்மனுதாரராகக் கூட சேர்க்காமல், அவரது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலப் பரிமாற்றங்கள் தொடர்பாக தக்காரால் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சார்பதிவாளர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தவறிவிட்டார். ஆன்மீக மடத்தின் சொத்துக்களைத் தனியார் நபர்கள் அபகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு, தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அரசு தரப்பில், ‘‘நீதிமன்றத்தில் முழு விவரங்களையும் தெரிவிக்காமல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதனால் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் பதிவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நிலத்தை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமான சார்பதிவாளர் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டு முறைகேடாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது. உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஒரு பத்திரப்பதிவு அதிகாரி எப்படி இவ்வாறு முறைகேடான பதிவுகளை மேற்கொள்ள முடியும்’’ என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், ‘‘சார்பதிவாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பி அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறைகேடான காரியம், எனினும், சார்பதிவாளர் பணியிடை நீக்கம் என்பது போதுமானதாக இல்லை குறிப்பிட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்பு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்டிருக்க வேண்டும். அதன் பிறகே பதிவுக்கு அனுமதி கோரியிருக்க வேண்டும். சொத்து தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பதை, சார்பதிவாளர் தரப்பில் ஐகோர்ட் கிளை தனி நீதிபதியிடம் தெரிவித்து இருக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து மோசடியாக தனி நீதிபதியிடம் உத்தரவு பெற்றுள்ளனர். முறையான நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், முழு விபரங்களை தெரிவிக்காமல் தனி நீதிபதி முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பிரச்னைக்குரிய மத வழிபாட்டு இடங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரணை செய்து தான் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே பத்திரப்பதிவு சட்டம் உள்ளது. பழநி கோயில் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்காமல், நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்காமல் சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். முத்திரை கட்டணம் செலுத்தவில்லை. இதனால் இந்த பத்திரப்பதிவு செல்லாது. முழு தகவல்களையும் தெரிவிக்காமல் ஐகோர்ட் கிளை தனி நீதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் பழநி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது என அறிவிக்கப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.
சார்பதிவாளரை கைது செய்ய தடை
பழநி மடத்தின் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தனி நீதிபதியின் உத்தரவை வைத்தே பத்திரப்பதிவு செய்யப்பட்டது. எனவே, இவ்வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என கூறினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மனு குறித்து திண்டுக்கல் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை நாளை (ஜூலை 17) தள்ளி வைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் மனுதாரரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.
மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து பத்திரப்பதிவை ரத்து செய்த நிலையில் இதுதொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலாவை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசடியின் பின்னணியில் பலர் இருப்பதால், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் இருந்த வழக்கை நேற்று சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஓரிரு நாளில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
