×

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு; 38 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்: மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம்

அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்திற்குப் பழிவாங்கும் வகையிலும், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்தும் நோக்கிலும் கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (சிமி) அமைப்பின் கிளை அமைப்பான ‘இந்தியன் முஜாஹிதீன்’ தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 77 நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று 2,215 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கியது.

அதில், 38 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், ‘விசாரணையின் போதோ அல்லது இந்த மேல்முறையீட்டு விசாரணையின் போதோ குற்றவாளிகள் தங்களது செயலுக்கு எந்தவிதமான வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு கருணை காட்டுவதற்கான எந்த ஆதாரங்களும் பதிவுகளில் இல்லை என்று கூறிய நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

Tags : Ahmedabad ,Gujarat High Court ,2002 Godhra riots ,Gujarat ,
× RELATED குஜராத்தில் சிறுத்தையுடன் போராடி, 3...