லக்னோ: மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்களை எட்டி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், இன் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு அதிக தன்னிறைவு கொண்டதாகவும் நவீன மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளது.
மரபணு சிகிச்சை, அணு மருத்துவம் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகளாவிய சுகாதார சவால்களுக்கு இந்தியா உள்நாட்டு தீர்வுகளை உருவாக்கி வருகின்றது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மருத்துவ உபகரணங்களின் உற்பத்திக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதிக மனஅழுத்தம் நிறைந்த பணிச்சூழலை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்கள் தங்கள் சொந்த உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
