சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் மீது பறவை மோதி சிக்கியது: 236 பயணிகள் உயிர் தப்பினர்

மீனம்பாக்கம்: இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3.30 மணியளவில் வந்து, பின்னர் இங்கிருந்து அதே விமானம் சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 5.35 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் லண்டனில் இருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தரையிறங்க படிப்படியாக வேகத்தையும் உயரத்தையும் குறைத்து, சுமார் 500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் முன்பகுதியில் திடீரென ஒரு பறவை வேகமாக வந்து மோதி, விமான இன்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது. இதில் பரபரப்பான விமானி, சென்னை விமானநிலைய ஓடுபாதையில் வழக்கமாக தரையிறங்கக்கூடிய இடத்தில் விமானி சமயோசிதமாக கையாண்டு பத்திரமாக தரையிறக்கினார். இதனால், அந்த விமானத்தில் இருந்த 236 பேரும் எவ்வித பாதிப்பின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் விமான பொறியாளர்களும் பாதுகாப்பு படையினரும் விரைந்து வந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை ஆய்வு செய்தனர். இதில், அப்பறவை மோதியதில் விமானம் சேதமானதால், அவ்விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாது. விமானத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகுதான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இயக்க முடியும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் லண்டனுக்கு செல்லவிருந்த 268 பயணிகளும், சென்னை நகர ஓட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். லண்டனுக்கு புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் நேரம் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

Related Stories: