மார்த்தாண்டம், ஜூன் 21: மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்று பனைமர தொழிலாளர்களுக்கு நிவாரணம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பிரதி ஜீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 60 வயது நிரம்பிய பனை தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் இழக்கும் தொழிலாளிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழக்க வேண்டும், கேரளாவை போன்று தமிழகத்தில் அரசு நிலங்களில் பனைமரம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும், பனைமர பூங்கா அமைக்க வேண்டும், சுனாமி போன்ற பேரழிவை தவிர்க்க கடற்கரை பகுதியில் பனை விதை நட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பாலகங்களில் பதனீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுலா தலங்களில் பனை பொருட்கள் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்லாந்து, இலங்கை நாடுகளில் பனை பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல் இந்தியாவில் இருந்து பனை பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
காடுகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வருவதால் ஏற்படும் உயிர் இழப்பு மற்றும் விவசாய இழப்புகளை தடுக்க 3 அடி இடைவெளியில் பனைமரங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கைகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறுவன தலைவர் பிரதி ஜீன், இயக்குனர் சைமன், நிர்வாக குழு தலைவர் வில்பிரட், மாநில தலைவர் அருள்ராஜ், மாநில இளைஞர் அணி தலைவர் அஜித், மகளிர் தலைவர் ஜெயா ,சுற்றுச்சூழல் பாசறை அணி தலைவர் ஜானட், கிள்ளியூர் இளைஞர் அணி பொறுப்பாளர் சாஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
