திண்டுக்கல், ஜூலை 13: திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து, 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் ரவுண்டு ரோடு ராம் நகரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. இவரது மனைவி மல்லிகா (60). சுந்தரவடிவேலு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மல்லிகா தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மல்லிகா, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, தனது மகளுடன் கடந்த ஜூன் 16ல் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தபின், நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அங்கு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். இதில் ஒரு அறையில் இருக்கும் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
