லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் இன்று மோதுகிறார். நடப்பு சீசனில் பெரிய தொடர் எதிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் ஏமாற்றமடைந்த சின்னர், விம்பிள்டன் கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.
இந்த ஆண்டு தொடர்ச்சியாக 5 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் சாம்பியன் பட்டம், 30 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருந்தாலும் 2026 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடமும், பிரெஞ்ச் ஓபனில் ஜுவன் மேனுவல் செருண்டோலோவிடமும் தோற்றது சின்னரை காயப்படுத்தி உள்ளது. ஸ்வெரவுடன் மோதிய 14 போட்டிகளில் சின்னர் 10-4 என முன்னிலை வகிப்பதுடன், கடைசியாக மோதிய 9 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.
அதே சமயம் சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த கையோடு விம்பிள்டனிலும் பைனலுக்கு முன்னேறி இருப்பதால் ஸ்வெரவும் மிகுந்த நம்பிக்கையுடன் வரிந்துகட்டுகிறார். புல்தரை மைதானங்களில் நடக்கும் பெரிய போட்டியில் இருவரும் இதற்கு முன் மோதியதில்லை என்பதால், இன்றைய போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்துவார் என்பதை கணிப்பது கடினம் தான்.
