×

ஈரானை அழித்து துவம்சம் செய்ய 1000 ஏவுகணைகள் தயார்: கொலை மிரட்டலுக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

துபாய்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனி இறுதி சடங்கில் தன்னை கொல்ல வேண்டுமென்ற பகிரங்க அழைப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஈரானை அழித்து துவம்சம் செய்ய 1000 ஏவுகணைகள் தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் இருதரப்பு போர் நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அவ்வழியாக பயணிக்கும் கப்பல்கள் இனி தாக்கப்படாது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்டது. அதற்கு செவிசாய்க்காத ஈரான், அந்த வழித்தடத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அதன் வழியாக செல்லும் கப்பல்கள் மீது கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்க வலியுறுத்தியது. இது அமெரிக்காவை ஆத்திரமூட்டிய நிலையில், சமீபத்தில் நடந்த மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில், இஸ்ரேலுடன் சேர்த்து அதிபர் டிரம்பை கொல்ல வேண்டுமென பலர் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.

இத்தகயை அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகம் மூலம் ஈரானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்ப் தனது பதிவில், ‘‘என்னை கொலை செய்யவோ, அத்தகைய முயற்சியில் ஈடுபடவோ ஈரான் அரசு துணிந்தால், உடனடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாய்ந்து வரும் வகையில், 1000 ஏவுகணைகள் ஈரானை நோக்கி தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அனைத்து பகுதிகளும் முற்றிலுமாக சிதைத்து அழிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு விட்டது. இதற்கான முழு திறனும் அமெரிக்காவிடம் உள்ளது. எல்லா புகழும் அல்லாவுக்கே’’ என மிரட்டல் விடுத்துள்ளார். இது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வைக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கத்தாருடன் இணைந்து ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags : President Trump ,Dubai ,Iran ,Supreme Leader ,Khamenei ,
× RELATED இந்தோனேசியாவில் தஞ்சங் உனா என்ற...