×

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து aசென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் வழக்குகளில் தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன் வைப்பதுண்டு.

இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் 1967 முதல் 2018ம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும் போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 84ன் கீழ் தேர்தல் வழக்கு தொடரும் பட்சத்தில் தேர்தல் முறைகேடாக நடந்ததாக அறிவிக்கப்பட்டு இரண்டாவதாக அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஒரு தொகுதிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.

தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு 2 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்னை எழும். தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராயவேண்டியுள்ளது. அதாவது, தொகுதி காலியாக உள்ளது என்பது முழுமையாக அறிவிக்கப்பட்ட பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த வழக்குகள் தொடர்பான சட்ட பிரச்னைகள் குறித்த முழு விளக்கங்களுடன் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிமுகவில் இருந்து பல எம்எல்ஏக்களை இழுக்க தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தநிலையில், இடைத்தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : midterm elections ,Trichy East ,Chennai ,High Court ,High Court of Assen ,Karur ,Viralimalai ,Perudura ,Ambasamutram ,Tamil Nadu Assembly ,
× RELATED தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்?.....