சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகளை வழங்க முதல்வர் விஜய் நாளை(10ம் தேதி) கரூருக்கு செல்ல உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்திற்கு வந்து அங்கு நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக கலையரங்க மைதானத்தில் சுமார் 5,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. முதல்வர் வருகையையொட்டி கரூரில் 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி.ஆனந்த் நேற்றிரவு கரூர் வந்து தங்கினார். அவர் இன்று காலை அட்லஸ் கலையரங்கில் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
திமுக பதாகை அகற்றம்
முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம், நிழற்குடைகள் ஆகியவற்றில் இருந்த திமுக பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி ஆணையர் பிரித்விராஜிடம் புகார் மனு அளித்தனர்.
