ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுப் பரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்க கோரி ராமகிருஷ்ணன் என்பவர் உள்ளிட்ட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பீகார் மாநிலத்தில் பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாக அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுப் பிரிவினருக்கான மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளது, என்றார். இதைக்கேட்ட நீதிபதி, அரசின் கொள்கை முடிவை, வரும் 24ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Related Stories: