தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் தொலைப்பேசி பேச்சுகள் பதிவு செய்யப்படவில்லை; சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசை கவிழ்க்க சதி என யூகத்தின் அடிப்படையில் புகார் கூறியுள்ளார்; சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழாது. சபாநாயகருக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர். தற்போது எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

அசோக்குமார் தான் தூண்டினார் என குற்றம் சுமத்தியுள்ளனர், ஆனால் திருநாவுக்கரசு ஈரோட்டில் இருந்த நாளில் அசோக்குமாரும் இருந்தார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்பதை வழக்கில் சொல்லவில்லை. கரூர் சம்பவம் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தலில் கட்சிக்காக பணியாற்றுவதை தடுக்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த பணமும் வழங்கவில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டார்.

அசோக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், எப்போதெல்லாம் சகோதரர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறதோ, அந்த வழக்குகளில் அசோக்குமாரை சேர்த்து விடுகிறார்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க கோர முடியாது. 108 உறுப்பினர்கள் உள்ளனர். 35 கோடி குதிரை பேரம் யூகம் தான்.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது. திமுக-வுக்கு 59 எம்.எல்.ஏக்கள், அதிமுகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் ஆளும் தவெகவுக்கு காங்கிரஸ், வி.சி.க., இரண்டு கம்யூனிஸ்டுகள் என எல்லாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். 59 பேர் உள்ள திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி,கைதானவர்கள் ஒன்றாக சேர்ந்து குற்றம் செய்துள்ளனர். அதற்கான சிசிடிவி ஆதாரம் உள்ளது.

பேரம் பேசப்பட்ட 10 எம்எல்ஏக்களில் ஒருவர்தான் ஊத்தங்கரை எம்எல்ஏ. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போதுதான் உண்மை வெளிவரும். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தினமும் காலை மற்றும் மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜார வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: