சென்னை: தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி நேற்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்களில் அரசு சார்பாக வாதாடும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் நியமனம் என்பது மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும்.
தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறை திறனுக்கு பதிலாக, இந்த பதவிகள் விலைக்கு வாங்கப்படுவதாக தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. வழக்கறிஞர் லெனின் ஜெயபாலன் என்பவர், அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம், அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த் பெயரையும், அவரது ஆதரவையும் பயன்படுத்தி, இந்த நியமனங்கள் அனைத்தும் அவரது அதிகாரத்தின் கீழ் தான் ஒதுக்கப்படுகின்றன என்று கூறி முறையற்ற வகையில் தொடர்ந்து பணம் கோரி வசூலித்து வருவதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
இதேபோல், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர், லெனின் ஜெயபாலனுடன் கூட்டுச் சேர்ந்து, இந்த நியமனங்கள் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மூலமாகவே கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்று கூறி விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலித்து வருகிறார். வசூல் முகவர்கள், பணம் கோருவதற்கு ஒரே அமைச்சரின் பெயரையும், மற்றும் நிர்மல் குமார் பெயரையும் தொடர்ந்து பயன்படுத்துவது, அமைச்சரின் அலுவலகங்கள் இந்த நியமனங்களுக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான வலுவான சூழ்நிலை ஆதாரமாகும்.
கடந்த 5ம் தேதி தவெக தலைமையிலான அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விண்ணப்ப அறிவிப்பை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பேராணை மனு இந்த முறைகேட்டுப் போக்கை உறுதிப்படுத்துகிறது. இதைப்பற்றி விசாரணை நடத்தினால், தகுதியுள்ள நபர்களைப் புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு இந்தப் பதவிகளை ஒதுக்குவதற்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு நெருக்கமானவர்களால் எவ்வளவு சட்டவிரோதப் பணம் வசூலிக்கப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வரும்.
திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், ஆடு திருட்டு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவர் திருப்பத்தூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அரசுப் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பதிவுகளில் உள்ள உண்மையாகும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. அங்கு விண்ணப்பங்கள் தகுதி அல்லது திறமையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படாமல், ரூ.3,00,000 முதல் ரூ.10,00,000 வரை சட்டவிரோதப் பணம் பெற்றுக் கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தவெக தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் தபா சிவன் உள்ளிட்ட அரசியல் நிர்வாகிகள் இத்தகைய பண வசூலைச் செய்ததாக அல்லது அதற்குத் துணையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை ஏதோ தனித்தனியாக மாவட்ட அளவில் நடந்த தவறுகள் அல்ல. இது அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் அரசியல் ஆதரவுடன் மாநிலம் தழுவி ஒருங்கிணைந்து நடத்தப்படும் சட்டவிரோதப் பண வசூல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத் திட்டம்.
எனவே, இதனைத் தனித்தனி மாவட்டப் புகார்களாகப் பார்க்காமல், ஒரு கூட்டுச் சதித் திட்டமாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் தகுந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, ஊழல் தடுப்புச் சட்டம் 1988 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் லெனின் ஜெயபாலன், பார்த்திபன், விஜயகாந்த், தபா சிவன் மற்றும் சட்டவிரோதப் பண வசூலில் ஈடுபட்டுள்ள பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத இதர நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தங்கள் பெயர்களில் பணம் வசூலிக்கப்பட்டதை அனுமதித்த, அறிந்திருந்த அல்லது அதன் மூலம் பயனடைந்த மேற்கண்ட அமைச்சர்களிடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித தயக்கமுமின்றி விரிவான விசாரணை நடத்தி, வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின் இறுதி இலக்கையும் பயனாளியையும் கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
