சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலைத் தீர்க்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகல் தலைமையில் நடந்த கூட்டத்தை முன்னாள் முதல்வர் சன்னியின் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
பஞ்சாபில் வரும் 2027ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் குழுக்களை காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் அறிவித்தது. இதில் மாநிலத் தலைவராக அமரீந்தர் சிங் ராஜா வாரிங் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லோக்சபா எம்பியான சரண்ஜித் சிங் சன்னி (முன்னாள் முதல்வர்) என்பவரை புதிய தலைவராக நியமிக்க வலியுறுத்தியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சமீபத்தில் மொகாலியில் தனியாகக் கூடி ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான உட்கட்சிப் பிரச்னையைத் தீர்த்து, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பூபேஷ் பாகல் 5 நாள் பயணமாக பஞ்சாப் வந்து நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் பிரசாரக் குழு தலைவரான சரண்ஜித் சிங் சன்னி மற்றும் அவரது ஆதரவாளர்களான முக்கிய தலைவர்கள் புறக்கணித்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த மாநிலத் தலைவர் ராஜா வாரிங், ‘சன்னி ஓரிரு நாட்களில் பூபேஷ் பாகலைச் சந்தித்துப் பேசுவார்’ என்று தெரிவித்தார். கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கருத்து தெரிவிக்கையில், ‘உட்கட்சிப் பிரச்னைகள் அனைத்துக் கட்சியிலும் இருப்பது இயல்புதான், அவை விரைவில் பேசித் தீர்க்கப்படும்’ என்று கூறினார். அதே வேளையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஓரிரு நாட்களில் அனைவரிடமும் பேசி சுமுக முடிவு எட்டப்படும் என்றும் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
