×

ஊட்டி உருளைக்கிழங்கு மூட்டை ரூ.2,680-க்கு விற்பனை

 

மேட்டுப்பாளையம், ஜூலை 8: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில் ஊட்டி உருளைக்கிழங்கு மூட்டை ரூ.2680-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் – நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு குன்னூர், கோத்தகிரி,ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தொடர்ந்து இச்சங்கத்தில் தொழிலாளர்களால் உருளைக்கிழங்கு தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு ஏல முறையில் விற்பனை நடைபெறுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து குறைவாக இருந்ததாலும், வெளி மாநில உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்து இருந்ததாலும் உருளைக்கிழங்கின் விலை அதிகபட்சமாக 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1500 வரை மட்டுமே விற்பனையானது.

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதால் உருளைக்கிழங்கு விளைச்சல் சற்றுஅதிகரித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. ஊட்டி உருளைக்கிழங்கின் சுவை காரணமாக வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். அதன்படி நேற்று 750 மூட்டைகள் உருளைக்கிழங்கு நீலகிரி மலை மாவட்டத்தில் இருந்து இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மேலும், வெளி மாநில உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக 45 கிலோ கொண்ட மூட்டை உருளைக்கிழங்கு ரூ.2680 க்கு விற்பனையானது. இதனால் நீலகிரி மலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Mettupalayam ,Nilgiri Cooperative Marketing Society ,Mettupalayam-Nellithurai road ,Coonoor ,
× RELATED பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி...