×

சிப்காட்டிற்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு

 

சிவகங்கை, ஜூலை 8: காளையார்கோவில் அருகே தொன்மையான வானியல் கல்வட்டம் மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலங்களை சிப்காட் திட்டத்திற்கு கையகப்படுத்துவதை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் அருகே, புரசடிஉடைப்பு கிராமத்தில் உள்ள அரசு நிலங்களை சிப்காட் போன்ற தொழிற்பேட்டை திட்டங்களுக்காகக் கையகப்படுத்தும் நோக்கில், அரசுத் துறையினரால் நில அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மிகத் தொன்மையான வானியல் கல்வட்டம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், பல தலைமுறைகளாக இப்பகுதி எளிய மக்களின் ஆயிரக்கணக்கான மேய்ச்சல் கால்நடைகளுக்கு முதன்மையான மேய்ச்சல் நிலமாக விளங்கி வருகிறது.

இந்நிலங்களை அரசு கையகப்படுத்தினால், பாரம்பரிய மேய்ச்சல் தொழில் முற்றிலும் முடங்கி, இப்பகுதி மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.எனவே, தமிழக அரசு புரசடி உடைப்பு கிராமத்தில் நடைபெற்று வரும் நில அளவிடும் பணியை உடனடியாகக் கைவிட வேண்டும். வரலாற்றுத் தொன்மை வாய்ந்த வானியல் கல்வட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : SIPCOT ,Sivaganga ,Tamil Nadu Pastures Community Federation ,Kalaiyarkovil ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...