×

கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

 

புதுக்கோட்டை, ஜூலை 8: தெருவோர வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014-ன்படி ஏழை தொழிலாளர்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பல நூற்றுக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் சாலையோரங்களில் தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். பொறிகடலை, வேர்க்கடலை, இளநீர், நொங்கு, சர்பத், பூ, காய்கறிகள், பழங்கள், மாலை நேரங்களில் சிற்றுண்டி, சூப், சுண்டல் உள்ளிட்ட சிறு சிறு கடைகளை நடத்தி வருகின்றனர்.

தள்ளு வண்டிகளிலும், தரைகளில் தார்ப்பாய்களை விரித்தும் சாலை ஓரங்களில் இவர்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.காலையில் கடை நடத்துபவர்கள் மாலையில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு வியாபாரத்தில் மிச்சப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். மாலையில் சிற்றுண்டி, சூப், சுண்டல் விற்பவர்கள் இரவு 9 மணிக்கு பிறகு தாங்கள் கொண்டுவந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கும், பசியாற்றுவவர்களும் ஏராளமானோர் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் அன்றாடம் கடை நடத்தினால்தான் கந்துவட்டிக்கு வாங்கிய கடன்களை தினசரி அடைக்கவும், பிள்ளைகளைக் கவனிக்கவம், தங்கள் வீடுகளில் அடுப்பு எரிக்கவும் முடியும்.

இந்நிலையில், சமீப காலங்களாக இப்படி சாலை ஓரங்களில் கடை நடத்தும் வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இதனை கண்டித்து புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சிஐடியூ மாநகர ஒருங்கிணைப்பாளர் ரகுமான் தலைமை வகித்தார். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாவட்டச் செயலாளர் தர், தலைவர் முகமதலி ஜின்னா, நிர்வாகிகள் பாவேல்குமார், சாத்தையா, மணிமாறன் உள்ளிட்டோர் பேசினர்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா, புதிய பேருந்து நிலையம், மகளிர் கல்லூரி, திருக்கோகர்ணம், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா முன்னிலையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்குவது, மநாகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள சாலையோர வியாபராக்குழுவை முறையாக கூட்டுவது, சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் இடங்களை ஆய்வு செய்து அவர்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்யும் வகையில் இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது எனவும், அதுவரை எந்த வியாபாரியையும் அப்புறப்படுத்துவதில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : Pudukottai Corporation ,Pudukottai ,CITU ,Pudukottai Corporation… ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...