சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் ‘சமூக நீதித்துறை’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 166(2) மற்றும் 166(3) பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், தமிழக ஆளுநரின் உத்தரவின்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு அலுவல் நடைமுறை விதிகள், 1978-ன் முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த ‘‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை” என்ற பெயருக்கு பதிலாக ‘‘சமூக நீதித்துறை” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
