×

‘தவறுகள் செய்தேன், கற்றுக்கொண்டேன்’ நானும் அரசு பள்ளியில் படித்தவள்தான்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

சென்னை: அரசு பள்ளி மாணவி எந்த மேடையிலும் தலை நிமிர்ந்து பேச வேண்டும் என்பதே என் நோக்கம். நானும் அரசு பள்ளியில் படித்தவள்தான் என்று அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதிலளிக்க தடுமாறிய மாணவி குறித்து, ஆசிரியையிடம் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. முதல் பெஞ்சில் உள்ளவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. கடைசி பெஞ்சில் உள்ளவருக்கு என்ன தெரியும் என்று கிண்டலாக கேட்டார்.

இதை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு அரசு பள்ளி மாணவி.

நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறார்கள். நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன்.

தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Minister ,Keerthana ,Chennai ,Sivakasi ,Virudhunagar district… ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...