×

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யுங்கள் விவசாயிகளை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் நீடித்து நிலைத்ததில்லை: தவெக அரசுக்கு திமுக விவசாய அணி செயலாளர் எச்சரிக்கை

சென்னை: திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் விவசாயி சோமசுந்தரம் கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து 85 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முறை விஜய் அரசு அறிவிப்பு வெளியிட்டும் 75 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாததால் சோமசுந்தரம் மன உளைச்சலில் இருந்தார். பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் 4ம் தேதி நடந்த விவசாயிகள் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பியதுமே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் விஜய்.

ஆனால் ஆட்சிக்கு வந்த விஜய் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. மகாராஷ்டிராவில் 55.72 லட்சம் விவசாயிகள் வாங்கிய 36,585 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை மகாராஷ்டிரா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. மகாராஷ்டிராவில் தள்ளுபடி செய்ய முடியும். தமிழ்நாட்டில் முடியாதா? தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்து மேலும் மன உளைச்சலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முழுமையான கடன் தள்ளுபடியை விஜய் அரசு செய்ய வேண்டும். இறந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் நீடித்து நிலைத்ததில்லை என்பதே வரலாறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK Agriculture Team ,Thaveka government ,Chennai ,A.K.S. Vijayan ,Nagapattinam ,Somasundaram ,Cooperative Bank ,Vijay government ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...