- வைகை
- அணை
- மதுரை
- நீர்வளத் துறை
- சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு
- வைகை அணை
- பிறகு நான்
- மேற்கத்திய காடுகள்...
மதுரை, ஜூலை 6: வைகை அணையை தூர்வாரும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி பெற அறிக்கை சமர்ப்பித்து நீர்வளத்துறை கட்டணமும் செலுத்தியுள்ள நிலையில், தாமதப்படுத்தாமல் அனுமதி கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயில் கலக்கும் வைகை ஆற்றின் குறுக்கே 1959ம் ஆண்டு ஜன.29ல் காமராஜர் ஆட்சியில் வைகை அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு 67 ஆண்டுகளான நிலையில் அதில் படிந்துள்ள வண்டல் மண் உள்ளிட்ட படிமங்களால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி சுருங்கி வருவதாகவும், அதை தூர்வார வேண்டுமென மதுரை உள்பட ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நான்கு கட்டம்
கடந்த, 2000ம் ஆண்டில் அப்போதைய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் வைகை அணையை தூர்வார ரூ.500 கோடி நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அணைக்குள் எடுக்கும் மணல் உள்ளிட்ட படிமங்களை கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்ததாலும், எடுக்கப்படும் மண்ணை கொட்டி வைக்க போதிய இடவசதியில்லை என புகார் எழுந்ததாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின், நான்கு கட்டங்களாக அணையின் கொள்ளளவு ஆய்வு நடத்தப்பட்டது. 2013ம் ஆண்டில் இந்திய நீரியல் மற்றும் நீர்நிலையியல் நிறுவனம் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டு, 2017ல் அரியானா மாநிலம்,
குர்கானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தரப்பில் அணையை தூர்வாருவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, அணையில் தற்போதைய நிலையில் 39.79 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு, 20.43 சதவீதம் வண்டல் சேர்ந்துள்ளதுதாகவும், அணையில் உள்ள வண்டலை அகற்ற ‘வருவாய் ஈட்டும் முன்னோடி திட்டம்’ என்ற அடிப்படையில் அகற்றலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. முதல்கட்டமாக மொத்தமுள்ள வண்டலில் 28.4 சதவீதம் மட்டுமே அகற்றப்பட வேண்டுமெனவும், தமிழக அரசுக்கு ரூ.250 கோடி வரை லாபம் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மாத இறுதிக்குள்
அதேபோல், திட்ட பணிகளை ஏலம் கோரும் ஒப்பந்ததாரரே சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல், அணுகு சாலை அமைத்தல், வண்டல் படிவுகளை பிரித்தெடுப்பதற்கான இயந்திரங்களை நிறுவுதல், தூர்வாரும் பணியின் போது நீர்த்தேக்கத்தின் நீர் தரத்தை பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களை குவித்து வைத்தல் மற்றும் இறுதிப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது அகற்றுதல் ஆகியவற்றுக்கான செலவுகளை தாமே ஏற்கவும் உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத்துறை அறிக்கை சமர்பித்து ரூ.10 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை கூடும் ஆணைய கமிட்டி அதிகாரிகள் தரப்பில், இந்த மாத இறுதிக்குள் அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
