மணப்பாறை: மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை சினிமா பாணியில் காரில் கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(27). மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டியை சேர்ந்த சித்திரைவள்ளி(26). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 25ம் தேதி வயலூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு சித்தாநத்தத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து சித்திரைவள்ளி நகை, பணத்தை எடுத்து சென்று விட்டதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர். இந்த விசாரணைக்காக மணப்பாறை காவல் நிலையத்தில் அஜித்குமார், சித்திரைவள்ளி நேற்று ஆஜராகினர். சித்திரைவள்ளி தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
விசாரணை முடிந்து தம்பதி இருவரும் உறவினர்களுடன் பயணிகள் ஆட்டோவில் சித்தாநத்ததுக்கு சென்றனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பாலப்பட்டி அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த கார் ஆட்டோவை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியது. பின்னர் காரிலிருந்து இறங்கிய பெண்ணின் உறவினர்கள், ஆட்டோவில் இருந்த அஜித்குமாரை தாக்கி விட்டு சித்திரைவள்ளியை காரில் கடத்தி சென்றனர். தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீசார் யாகபுரத்தில் உறவினர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்திருந்த சித்திரைவள்ளியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சாதிய ஆதிக்கத்தால் எங்கள் காதலுக்கு எனது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி திருமணம் செய்து கொண்டோம்.
எங்களை பிரித்து கொலை செய்யும் நோக்கத்துடன் எனது உறவினர்கள், அவரது நண்பர்கள் சேர்ந்து அஜித்குமாரை தாக்கி என்னை கடத்தி சென்றனர் என்று சித்திரைவள்ளி புகார் செய்தார். அதன்பேரில் பெண்ணின் உறவினர்களான முருகேசன்(38), மலைச்சாமி(29), பிரகாஷ்(28) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். இன்று காலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
