×

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசின் பரிந்துரையின்பேரில், 2026 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று அவர் தெரித்துள்ளார்.

நான்கு வாரங்கள் நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில், 19 அமர்வுகள் இடம்பெறும். இதில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.

‘நீட்’ வினாத்தாள் கசிவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டத்தொடர் முழுவதும் கடும் அமளிக்கு மத்தியில் பரபரப்பான சூழலே நிலவும்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளுக்குள் வெடித்துள்ள உட்கட்சி பூசலுக்கு பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது.

இந்தியா கூட்டணியிடம் இருந்து திமுக சற்று விலகி உள்ள நிலையில், கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுமா அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Monsoon session of Parliament ,Union government ,Delhi ,monsoon session ,Parliament ,Union Minister ,Kiren Rijiju ,President ,Draupadi Murmu ,
× RELATED நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்...