சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நபருக்கு தண்டனை குறைப்பு வழங்கியது தொடர்பான விவரங்களை தெரிவிக்காத ஒன்றிய அரசுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் 720 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தால் ஜாகீர் உசேனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய-இலங்கை இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி, கடந்த 2016ம் ஆண்டு ஜாகிர் உசேன் இந்தியா கொண்டு வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில், ஜாகிர் உசேன் 2022ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், தனது தந்தையை விடுவிக்காமல், தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாகிர் உசேனின் மகன் சமீர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியாவில் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும் என்கிற நிலையில் 2022ம் ஆண்டு வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்தும், ஜாகிர் உசேன் நாடு கடத்தப்பட்ட போது, இந்தியா – இலங்கை இடையிலான கடித போக்குவரத்து தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த விவரங்களை ஒன்றிய அரசு தரவில்லை. இதையடுத்து, ஒன்றிய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்கள் ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அபராதத் தொகையை இரு அதிகாரிகளும் இணைந்து, நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
