விருதுநகர், ஜூலை 3: ஒன்றிய அரசு நடத்தும் ரயில்வே தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 8ம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுவாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் வை-பை வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் உள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய உதவி லோகோ பைலட் தேர்வுக்கான இலவச வகுப்பு ஜூலை 8 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள், முழுமாதிரித் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/rzTqHEiU8yigdCGp6 என்ற இணைப்பு (Google Link) மூலமாகவோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
