திருச்சுழி, ஜூலை 2: நரிக்குடி அருகே, 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டிய மன்னர் காலத்தில் வரிக்கணக்கை நிர்வகித்த அதிகாரி குறித்த தகவல் தெரிய வந்துள்ள்து. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் எதிரே சீமைக்கருவேல மரங்களுக்குள் சிதறிக் கிடந்த கற்களில், 800 ஆண்டுகள் பழமையான, முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி.1190-1218) கால கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.
இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது: தற்போது மானூர் எனப்படும் இவ்வூர், கல்வெட்டுகளில் மானையூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அனாகுலீஸ்வரமுடைய நாயனார், விக்கிரமபாண்டிய விண்ணகரம் ஆகிய சிவன், திருமால் கோயில்கள் இருந்ததாக மானூர் மற்றும் நரிக்குடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மானூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் 34 துண்டுக்கல்வெட்டுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது. இக்கோயில் கற்கள், அதன் எதிரில் உள்ள சீமைக்கருவேல மரங்களுக்குள் சிதறிக் கிடக்கின்றன. அதில் ஒரு கல்லில் இரண்டு வரிகளில் ஒரு துண்டுக் கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டில் வடதலைச் செம்பி நாட்டு ஆயக்குடியான அழகிய பாண்டிய நல்லூர் சோமதேவன், விரதம் முடித்த பெருமான், குலசேகரக் காடுவெட்டி ஆகிய அரச அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கோயிலுக்கு தானம் கொடுத்ததும், அதற்கு ஒப்புதல் வழங்கிய அதிகாரிகளின் பெயர்களும் கல்வெட்டின் இறுதியில் இடம்பெற்றுள்ளன. சோமதேவன் என்பவர் பாண்டிய அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் புரவுவரி தினைக்கள நாயகமாக இருந்துள்ளார். அவரது முழுமையான பெயர் சோமதேவன் அழகிய மணவாளனான வில்லவராயன். இதை திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் குடைவரை, அழகர்கோயில், திருத்தங்கல் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். இவர் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.
வடதலைச் செம்பி நாடு என்பது ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியாகும். இதன் அருகில் உள்ள மேலாய்க்குடி, கீழாய்க்குடி ஆகிய ஊர்கள் ஆயக்குடி என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. கல்வெட்டு அதிகாரிகளின் பெயர்கள் மூலம் இது கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கால கல்வெட்டு எனலாம். இதை கோயிலில் வைத்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
