×

காயல்பட்டினத்தில் திறக்கப்பட்டு 3 மாதமாகியும் பஸ்கள் உள்ளே செல்லாத நவீன பேருந்து நிலையம்

 

ஆறுமுகநேரி, ஜூலை 1: காயல்பட்டினத்தில் ரூ.5.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பஸ்கள் உள்ளே செல்லாத நிலையே நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி – திருச்செந்தூர் வழித்தடத்தில் அதிகப்படியான பஸ்கள், காயல்பட்டினம் வழியாக இயக்கப்படுகிறது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2023-24ம் நிதியாண்டில் பேருந்து நிலையம் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பணியானது முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்குள் 45 கடைகள், நூலகம், மார்க்கெட், பல்நோக்கு மைய கட்டிடம் என பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது கடைகள் ஏலம் எடுப்பவர்களுக்காக அழைப்பு கொடுக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி காயல்பட்டினம் வழியாக வரும் அரசு, தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பேருந்து நிலையம் முன்புள்ள ஜங்ஷனில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர்.

மேலும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காயல்பட்டினம் வழியாக வரும் பேருந்துகளும் அதே இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே காயல்பட்டினம் மெயின் பஜார் சாலை மிக குறுகலாக இருப்பதால் பேருந்துகள் இருவழிப் பாதையாக உள்ளே வெளியே சென்று வருகிறது. குறிப்பாக காயல்பட்டினம் பைபாஸ் வழியாக வரும் வாகனங்கள், பேருந்து நிலையத்தை எட்டிக்கூட பார்ப்பதில்லை. இதனால் பேருந்து நிலையத்திற்குள் காத்திருக்கும் பயணிகள் பஸ் உள்ளே வரும் என வழி மீது விழி வைத்து ஏமாற்றமடைந்து பின்னர் வெளியில் வந்து காத்திருந்து பஸ்களில் ஏறி பயணம் செய்கின்றனர்.

மேலும் பைபாஸ் வழியாக வரும் பஸ்கள் காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு வராததால் பயணிகள் கூடுதல் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், தேவையற்ற அலைச்சல்களை குறைக்கவும் போக்குவரத்து துறை சார்பில் உடனடியாக அனைத்து பஸ்களும் காயல்பட்டினம் நவீன பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kayalpattinam ,Arumuganeri ,
× RELATED ஸ்கூட்டர் டிக்கியில் வைத்திருந்த...