சிகாதேரி: கர்நாடகாவில் உள்ள சிகாதேரி மாவட்ட அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் (Operation Theatre) ஏற்பட்ட திடீர் தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று, இன்று காலை எதிர்பாராவிதமாக வெடித்தது. இந்த நிகழ்வால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்த சில மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.
இந்த தீ விபத்து நடந்த போது, இன்றைய தினத்திற்கான அறுவை சிகிச்சை தயாரிப்புகளில் 7 முதல் 8 மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக, நோயாளிகள் யாரும் அறுவை சிகிச்சை அரங்கினுள் இருக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக அந்த தளத்தில் இருந்த மற்ற நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனை ஊழியர்கள் முதலில் சிறிய தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் புகை அதிகமாக இருந்ததால் அவர்களால் முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மற்றும் ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் ஒரு முக்கிய அரசு மருத்துவமனையின் அறுவைசிகிச்சை அரங்கினுள் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்திற்கான துல்லிய காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
