கயத்தாறு, ஜூன் 30: கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்டது ராஜாபுதுக்குடி கிராமம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அருகிலுள்ள கிராமங்களான டி.என்.குளம், ராஜாபுதுக்குடி மேலூர் மற்றும் கீழூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நெல்லை மற்றும் கோவில்பட்டி போன்ற பெருநகரங்களுக்கு கல்வி பயில்வதற்காகவும், பணி மற்றும் தொழில் நிமித்தமாகவும் பஸ்சில ஏறிச் செல்வது வழக்கம்.
மேலும் இப்பகுதியில் பூக்கள் பயிர் செய்துள்ள பெருவாரியான விவசாயிகள், அதிகாலையில் தாங்கள் பறிக்கின்ற பூக்களை நெல்லை பூ மார்க்கெட்டிற்கு காலை பஸ்சில் கொண்டு செல்வதும் வழக்கம். ஆனால் பெருவாரியான அரசு பஸ்கள், இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. நின்று செல்லும் ஒரு சில அரசு பஸ்களும் மற்றும் தனியார் பஸ்களில் மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் செல்லும் அவலநிலையே தினமும் தொடர்கிறது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், நெல்லை கோட்ட பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வழியாக மதுரையை கடந்து செல்லும் பஸ்கள் தவிர்த்து அனைத்து அரசு பஸ்களும் ராஜாபுதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என அரசாணை வெளியிட்டனர்.
இந்த ஆணை வெளியிட்டு பல ஆண்டுகளான நிலையிலும் பெருவாரியான அரசு பஸ்கள் வழக்கம்போல் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமலே சென்று விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி குறிப்பிடப்பட்டுள்ள பஸ்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
