ஊட்டி, ஜூன் 30: ஊட்டியில் சேறும் சகதியும் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி மாசடைந்த தண்ணீருடன் பொதுமக்கள கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து, என்சிஎம்எஸ் அண்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது போதிய மழையில்லாததால் இந்த அணையில் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. இதனிடையே ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பகுதியியில் உள்ள என்சிஎம்எஸ் அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த பல நாட்களாக துர்நாற்றத்துடன் சேறு கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீைரை அருந்தவும், உணவு சமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் மாசடைந்த தண்ணீருடன் நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாசடைந்த தண்ணீரை விநியோகிப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பணம் கொடுத்து லாரி தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசமான குடிநீர் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்களுக்கு நோய் தொற்று பரவி வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு கூறினர். இதேபோல் கோத்தகிரி அருகே எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் சுமார் 55க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படுவதில்லை. குறிப்பாக வாரத்திற்கு இரு நாட்கள் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் முறையாக வருவதே இல்லை. இது குறித்து பார்வையிட்ட போது எங்கள் பகுதிக்கு வரும் நீர் ஆதாரத்தை மறித்து எடப்பள்ளியை சேர்ந்த ஒருவர் தனது விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் எவ்வித அனுமதியுமின்றி கிணறு தோண்டியுள்ளார். இதனால் எங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிய போது எங்களை ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.
