தேன்கனிக்கோட்டை: குடும்பத் தகராறில் ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கும் போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சி மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா(24) என்பவரை, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், சுஷ்மிதா கோபித்துக்கொண்டு மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று மதியம் ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தப்பா, தாயார் கெம்பம்மா மற்றும் ஊர் பெரியவர்கள் 30 பேர், மல்லிகை பாய் தொட்டி கிராமத்தில் உள்ள சுஷ்மிதா வீட்டுக்கு பஞ்சாயத்து பேசி சுஷ்மிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தனர்.
அப்போது மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள் ஒரு புறம் பஞ்சாயத்து பேசிக்கொண்டு இருந்த போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜேஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் ஆவேசமாக குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அலறினர். இதனால், ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஷ்மிதாவை மீட்ட அவரது பெற்றோர், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேஷ், கர்நாடகா மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்கள் தளி போலீசாரிடம், ராஜேஷை ஒப்படைத்தனர். பின்னர், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
