×

தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேர் படுகொலை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் அருகே திருத்தேரி பகுதியில் வாடகை அறையில் நண்பர்களுடன் வசித்து வந்தவர் முப்தாக் (21). இவர் மறைமலைநகர் பகுதியில் அமைந்துள்ள பாஸ்ட்புட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு கடையில் வேலை முடிந்ததும் வழக்கம் போல தனது அறைக்கு முப்தாக் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 5 பேர் கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் முப்தாகை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார். தகவலறிந்து சிங்கப்பெருமாள்கோயில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து முப்தாக்குடன் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேளச்சேரி
சென்னை மேடவாக்கம் அம்பேத்கர் நகர், சேரன் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவில் நெற்றியில் பலத்த காயத்துடன் ஒருவர் மயங்கி இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (48) என்பதும் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தவர் எனவும் தெரியவந்தது. மேலும் டிரைவர் இருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ‘ப’ வடிவ இரும்பு தகட்டில் சுரேஷின் நெற்றி மோதி, இடது கண் புருவத்தின் மேற்பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா அல்லது ஏதாவது தகராறு காரணமாக ஆட்டோவில் ேமாத வைத்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இவருக்கு சலோமி என்ற மனைவியும், சந்தோஷ் (19), கார்த்திகேயன் (16) என்ற 2 மகன்களும் இருப்பதும் தெரியவந்தது. மேலும், குடும்பத்தை பிரிந்து தனியாக வசிப்பதும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் அடுத்த கண்ணம்பிவிளை பகுதியை சேர்ந்தவர் சிங்கம் (60). கதம்பை லோடு ஏற்றும் தொழிலாளி. சிங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்தும் மது அருந்துவது வழக்கம் ஆகும். இதே போல் கண்ணம்பிவிளை பகுதியை சேர்ந்தவர் லிங்கசாமி (49). கொத்தனார். இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று இரவு சிங்கம், லிங்கசாமி மற்றும் சிலர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு காலிமனையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை அவர்கள் மது அருந்திய இடத்தில் சிங்கம், லிங்கசாமி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதில் லிங்கசாமிக்கு கல்லால் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் குத்து காயங்கள் இருந்தன. சிங்கத்துக்கு கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. பின் தலையிலும் காயம் இருந்தது. இது குறித்து தகவலறிந்த ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் அறிந்ததும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர்.

2 பேர் கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வில்லை. மொத்தம் 4 பேர் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. 2 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சந்தேகத்தின் பேரில் கண்ணம்பிவிளையை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

3 பேர் படுகொலை
குமரி மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று மாலையில், நாகர்கோவில் அடுத்த புதுக்கிராமம் அருகே தனியார் பள்ளியில், கட்டிட தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் சக தொழாளி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றார். இந்த கொலை நடந்த சில மணி நேரத்தில், கண்ணம்பிவிளையில் இரட்டை கொலை நடந்துள்ளது. ஒரே நாளில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (44), விவசாயி. இவரது மனைவி கற்பகம்(36). இவர்களுக்கு சுகாசில், துஷ்யந்த் ஆகிய 2 மகன்கள், தூதுமலர் என்ற மகள் உள்ளனர். துலுக்கானத்தின் அண்ணன்கள் சேகர், எத்துராஜ். இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தனித்தனியாக உள்ளது. சேகர் கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன்கள் சத்தியமூர்த்தி(34). சக்திவேல்(32). இந்நிலையில் துலுக்கானமும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து பயிரிடும் ஒரு விவசாய நிலத்தில், சத்தியமூர்த்தி வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக துலுக்கானத்திடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு துலுக்கானம், இருவருக்கும் பொதுவாக வழியை விட்டுவிட்டு வீடு கட்டிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து வீடு கட்ட தொடங்கிய சத்தியமூர்த்தி, வீடு கட்டுவதற்கான மண்ணை நேற்று மாலை கொட்டியுள்ளார். அப்போது துலுக்கானம் பயிரிட்டுள்ள வேர்க்கடலை செடிகள் மீது மண் கொட்டியுள்ளது. நேற்றிரவு நிலத்திற்கு சென்ற துலுக்கானம், வேர்க்கடலை செடிகள் மீது மண் கொட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சத்தியமூர்த்தியிடம் சென்று தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த சத்தியமூர்த்தியின் தம்பி சக்திவேல்(32), தாய் சரளா, மனைவி கார்த்திகா, சக்திவேல் மனைவி சந்திரா ஆகியோர் சேர்ந்து, துலுக்கானத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த துலுக்கானம் மயங்கி விழுந்தார். அவரை எத்துராஜ் மற்றும் குடும்பத்தினர் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், துலுக்கானம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி, சக்திவேல், சரளா, கார்த்திகா, சந்திரா ஆகிய 5 பேரையும் இன்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் புதிய பஸ்நிலையம் அருகே, வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, இன்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காரைக்குடி வடக்கு போலீசார் கொலையான வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலையானவருக்கு 30 வயது இருக்கும், பேண்ட், சர்ட் அணிந்திருந்தார். தலையில் காயங்கள் மற்றும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. இடது கையில் ஆதித்தி என்ற பெயரும், வலது கையில் காவியா என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

சோழவந்தான்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கல்புளிச்சான்பட்டியை சேர்ந்தவர் சித்திக் (25). நேற்று இரவு செக்கானூரணி-விக்கிரமங்கலம் சாலையில் குளத்துபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2024ம் ஆண்டு சித்திக், அவரது அண்ணனும் சேர்ந்து ஒருவரை கொலை செய்துள்ளனர். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,CHENGALPATTU ,SINGAPERUMAL ,THIRUTHERI AREA ,CHENGALPATU ,
× RELATED தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை