மால்டா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் ஹபிப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட காந்துர்கா பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் தலைமையாசிரியர் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடம் இது குறித்து பேசியபோது, பல மாணவிகளுக்கும் இதே போன்ற கசப்பான அனுபவம் அந்த தலைமையாசிரியரால் ஏற்கனவே ஏற்பட்டது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் திரண்டு வந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை பள்ளி அறைக்குள் வைத்து பூட்டி சிறைவைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தலைமையாசிரியரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து ஹபிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ஜோயல் முர்மு (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்), போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
