நாகர்கோவில்: சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த சரவண குமார் (35) கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கபாண்டி என்பவர் இக்கொடூரத்தை செய்து தப்பி ஓடியுள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 35) என்ற தொழிலாளி கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் சரவணகுமார், அவருடன் வேலை பார்த்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி (40) என்ற தொழிலாளியும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. தகராறு முற்றியதால் அவர்களை சக தொழிலாளர்கள் சமாதானம் செய்து விலக்கி விட்டனர். இதையடுத்து இருவரில் ஒருவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
நெல்லை ரயில் நிலைய யார்டு விரிவாக்கப் பணிகளால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால், சொந்த ஊர் செல்ல நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த கட்டுமானத் தொழிலாளி தங்கபாண்டி, ஏமாற்றத்துடன் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கே திரும்பினார்.
அப்போது சரவணகுமார் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட தங்கபாண்டிக்கு மீண்டும் ஆத்திரம் ஏற்பட்டதில் அருகில் இருந்த சிமெண்டு கல்லை எடுத்து சரவணகுமாரின் தலையில் போட்டார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தங்கபாண்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தொழிலாளி சரவணகுமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ந்த சக தொழிலாளர்கள் சுசீந்திரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய தங்கபாண்டியைத் தீவிரமாகத் தேடி, சக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
