திருப்போரூர், ஜூன் 29: ஓஎம்ஆரில் காருடன் கடத்தப்பட்ட மோசடி பைனான்ஸ் அதிபரை மீட்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின்போது நியோமேக்ஸ் என்ற நிறுவனம் மாநிலம் முழுவதும் பல்வேறு நபர்களிடம் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது. பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து லாபத்தை 3 மடங்காக கொடுப்பதாக அந்த நிறுவனம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி பலரும் அதில் முதலீடு செய்தனர். ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (56). இவர் நேற்று முன்தினம் தனது காரில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் பகுதிக்கு சென்றார். அவரது கார் ஓட்டுனர் பெருங்குடியைச் சேர்ந்த ஷியாம் (30) என்பவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். நாவலூரில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஷியாமிடம் எதிரே உள்ள ஷாப்பிங் மாலின் உள்ளே செயல்படும் எலைட் மதுபானக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி வருமாறு தனது ஓட்டுனரிடம் கூறியதையடுத்து ஷியாம் காரில் இருந்து இறங்கி சாலையின் எதிர் திசையில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றார்.
15 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தபோது காரையும் அதில் இருந்த சார்லசையும் காணவில்லை. அவரது அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயந்து போன ஷியாம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். இதையடுத்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷியாமிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வேறொரு காரில் 4 பேர் வந்ததும், அதில் இருந்த 3 பேர் இறங்கி சார்லசிடம் பேச்சு கொடுத்து அவரது காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து சார்லசை காருடன் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சென்ற கார் திருச்சி சுங்கச்சாவடியை கடந்த சென்றது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இவர்களை கண்டுபிடிக்க தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜ் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
