×

கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதியில் உயிரினங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

 

கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்ட காப்புக்காடு பகுதிகளில், கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, வன உயிரினங்களின் குடிநீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5,143 சதுர கி.மீ. ஆகும். இதில் ஓசூர் வனக்கோட்டமானது 1,492 சதுர கி.மீ (29 சதவீதம்) பரப்பளவுடன் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது. இங்குள்ள அதிக அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வன உயிரினங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அவைகளை பாதுகாக்கும் பொருட்டு, 2014ம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமும், 2022ம் ஆண்டு காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமும், தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருதுகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள், காட்டுப்பூனைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்கள் காணப்படுகின்றன.

வனப்பகுதிக்குள் அவ்வப்போது ஏற்படும் வறட்சியின் காரணமாகவும், உணவு, குடிநீர் போன்றவற்றிற்காகவும், யானைகள், புள்ளிமான்கள், மயில்கள், பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் காப்புக்காடுகளில் இருந்து அவ்வப்போது வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது மனித மற்றும் வன உயிரின மோதல்கள் நிகழ்கின்றன. மேலும், ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவேரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 125 முதல் 150 யானைகள் கூட்டம் கூட்டமாக தளி, ஜவளகிரி காப்புக்காடுகளில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகாராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திர மாநிலம் கவுன்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இவ்வாறு வரும் யானை கூட்டங்கள், ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக் காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலயங்களில் உள்ள விவசாய பயிர்களை உண்டும், சேதப்படுத்தியும், மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில், யானைகள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறி சேதங்கள் ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஓசூர் வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளின் எல்லையோரம் யானை தாண்டா அகழிகள் வெட்டப்பட்டும், சூரிய மின்வேலி அமைத்தும், நவீன வகையிலான தடுப்பு நடவடிக்கைகளான இரும்பு வட கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், யானைகளுக்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அத்துடன் யானைகளுக்கு தேவையான உணவுகளை வனப்பகுதியில் உற்பத்தி செய்ய வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது குறையும். எனவே, அதற்கான நடவடிக்கையினை வனத்துறை செய்திட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Krishnagiri ,Hosur forest ,Krishnagiri district ,
× RELATED ராயக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில்...