பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 18வது வார்டு வேணுகோபால் தெருவில் 100க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று பொன்னேரி தாலுகா அலுவலகம் எதிரே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவரும் தண்ணீர் விநியோகம் இல்லாததால் நான்கு நாட்களாக குளிக்கக்கூட முடியாமல் அவதி அடைவதாக தெரிவித்தனர். மேலும், பணம் கொடுத்து குடிநீர் வாங்கி சமையல் மற்றும் குடிக்க பயன்படுத்தி வருவதாகவும், தண்ணீர் இல்லாததால் கடந்த 15 நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அப்புறப்படுத்தினர். இதனால், பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நகராட்சி டேங்கர் மூலம் அப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். காவல்துறையினர் தற்காலிகமாக குடிநீர் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில் உடனடியாக பழுதை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்தனர்.
