×

சிவாஜி, அமிதாப்பை இயக்கிய கே.பாக்யராஜ் கடந்து வந்த பாதை

 

கடந்த 1953 ஜனவரி 7ம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோயில் என்ற ஊரில் கிருஷ்ணசாமி, அமராவதி தம்பதிக்கு 2வது மகனாக பிறந்தவர் கே.பாக்யராஜ். அவருக்கு செல்வராஜ், தன்ராஜ் ஆகிய 2 அண்ணன்கள் இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் கதை, திரைக்கதை, வசனகர்த்தா மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர், பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த கலைஞராக திகழ்ந்தவர், கே.பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களில் பணியாற்றி, திரைக்கலை குறித்து நன்கு பயின்ற அவர், இப்படங்களில் சிறிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.

கடந்த 1977ல் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ என்ற படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய கே.பாக்யராஜ், பிறகு பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டுமின்றி, கவுண்டமணியுடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்தார். பிறகு பாரதிராஜா இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற படத்தில் உணவு விடுதி பணியாளர் வேடத்தில் நடித்தது மட்டுமின்றி, இப்படத்தின் வசனத்தையும் எழுதியிருந்தார். ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தின் மூலம் கே.பாக்யராஜை ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா, இப்படத்தில் கே.பாக்யராஜை வசனம் எழுத வைத்தார்.

* கடந்த 1979ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முதல் படம், ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. இடைப்பட்ட காலத்தில் அவர், ராஜேஷ் ஹீரோவாக அறிமுகமான ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து ‘ஒரு கை ஓசை’ என்ற படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த அவர், வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார். அவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர், ரசிகைகள் இருக்கின்றனர். தாய்க்குலத்துக்கு மிகவும் பிடித்த இயக்குனராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் அவர் விளங்கினார்.

‘மௌன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’ ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தை கே.பாக்யராஜ் இயக்கி நடித்தார். இது அவரது பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது. ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற படங்கள் கே.பாக்யராஜின் திரைக்கதை பாணியை உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக, ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தில் கே.பாக்யராஜ் கையாண்ட முருங்கைக்காய் போன்ற விஷயங்கள், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது. ‘சின்ன வீடு’, ‘எங்க சின்ன ராசா’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.

* ஒருகட்டத்தில் கே.பாக்யராஜ், நடிகை பிரவீணாவை காதல் திருமணம் செய்தார். கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘இன்று போய் நாளை வா’, ‘மௌன கீதங்கள்’, ‘பாமா ருக்மணி’ ஆகிய படங்களில் பிரவீணா நடித்திருந்தார். சில வருடங்களுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக பிரவீணா திடீரென்று மரணம் அடைந்தார். பிறகு அப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை கே.பாக்யராஜ் காதல் திருமணம் செய்தார். அவர்களின் திருமணம் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். கே.பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் கே.பாக்யராஜ் தனது இயக்கத்தில் நடிகையாகவும், நடிகராகவும் அறிமுகம் செய்தார். ஆரம்பகாலம் முதலே தன்னை எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக வெளிப்படுத்தி வந்த கே.பாக்யராஜ், ‘ருத்ரா’ என்ற படம் வெளியான காலக்கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களை திரையில் காட்டினார். பிறகு அதிமுகவில் இருந்து வெளியேறி, ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். நாளடைவில் அதை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

* எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது, தமிழ்நாட்டில் கடந்த 1989 பிப்ரவரி 11ம் தேதி கே.பாக்யராஜ் தொடங்கிய அரசியல் கட்சியாகும். இக்கட்சி கடந்த 1991ல் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளை பெற்றார். இக்கட்சி ஆரம்பத்திலேயே தோல்வி அடைந்தது. பிறகு கே.பாக்யராஜ் அதிமுகவில் சேர்ந்தார். கடந்த 2006 ஏப்ரல் 5ம் தேதி கலைஞர் முன்னிலையில் கே.பாக்யராஜ் திமுகவில் சேர்ந்தார், அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். பிறகு திமுகவில் இருந்து விலகினார். கடந்த 1988ல் தொடங்கப்பட்ட ‘பாக்யா’ என்ற வார இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி வந்த கே.பாக்யராஜ், அந்த இதழில் வெளியான தனது சுவாரஸ்யமான கேள்வி-பதில் மூலம் ரசிகர்களையும், வாசகர்களையும் தன்வசப்படுத்தினார்.

திரையுலகிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த அவர், இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நகைச்சுவை படமான ‘இன்று போய் நாளை வா’ என்ற படத்தில், ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற சிறுகதையை பற்றிய குறிப்பு வரும்படி காட்சி அமைத்திருந்தார். தனது குருவான பாரதிராஜாவை போலவே கே.பாக்யராஜும் பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் உள்பட பலர் வெற்றிகரமான இயக்குனர்களாக திகழ்ந்தனர்.

* படங்களில் தனது கதாபாத்திரத்தை அப்பாவித்தனமும், சாமர்த்தியமும் கலந்து வடிவமைத்து, ‘இது பாக்யராஜ் ஸ்டைல்’ என்ற தனி முத்திரையை பதித்தார். தன்னை தானே விமர்சித்து அல்லது கேலி செய்துகொள்ளும் அரிய பண்பு கொண்ட கே.பாக்யராஜ், இந்திய திரையுலகின் மிகச்சிறந்த திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டார். சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை உருவாக்குவதில் அவர் தனித்துவம் பெற்றிருந்தார். அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘அவசர போலீஸ் 100’ என்ற படம், கடந்த 1977ல் தமிழக முதல்வராவதற்கு முன்பு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் சில காட்சிகளில் நடித்து நிறுத்தப்பட்ட ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படத்தின் மறுவடிவமாக உருவானது.

அப்படத்தின் காட்சிகளை வைத்து புதிய திரைக்கதை எழுதி, அதில் இரட்டை வேடங்களில் நடித்து கே.பாக்யராஜ் உருவாக்கிய ‘அவசர போலீஸ் 100’, மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ என்ற படத்துக்கு கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பிறகு இப்படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடங்களில் நடிக்க, ‘ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் கே.பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றிபெற்றது.

* இளையராஜா இசையில் அதிக படங்களை இயக்கி நடித்த கே.பாக்யராஜ், பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தான் இயக்கி நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்துக்கு தானே துணிச்சலாக இசை அமைத்து, ‘பச்ச மல சாமி ஒண்ணு’ என்ற பாடலை பாடினார். அப்போது டைட்டிலில், ‘குயில்களுடன் இணைந்து பாடும் காகம்’ என்று தன்னை தானே விமர்சித்து இருந்தார். மேலும் சில படங்களுக்கும் அவர் இசை அமைத்தார். இந்நிலையில், தனது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக அவரை பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்தது. அதற்கு உதாரணமாக ‘முந்தானை முடிச்சு’ முருங்கைக்காய் மேட்டர், ‘சின்ன வீடு’ படத்தின் சில காட்சிகள், ‘இது நம்ம ஆளு’ படத்தின் சில காட்சிகளை பலர் குறிப்பிட்டு பேசினர்.

எனினும் அதற்கு விளக்கம் அளிக்க விரும்பாத கே.பாக்யராஜ், தனது படங்களின் காட்சிகளை விரசம் இல்லாமல் படமாக்கி நடித்தார். இதனால் அவரது படங்கள் பெண்களையும் கவர்ந்தது. பெரும்பாலும் அவர் இயக்கி நடிக்கும் படங்களில், கதாநாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருவது அவரது வழக்கம். திருதிருவென்று முழித்தபடி அப்பாவித்தனமாக வசனம் பேசி, மற்ற நடிகர், நடிகைகளிடம் ெமாக்கை வாங்குவது கே.பாக்யராஜின் தனி ஸ்டைல். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

* இந்தியில் கே.பாக்யராஜ் இயக்கிய படம், ‘ஆக்ரி ராஸ்தா’. அவரது பல படங்கள் தமிழில் வெற்றிபெற்றதால், அவர் இயக்கி நடித்த பல படங்கள் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அப்படங்கள் பலவற்றில் இந்தி நடிகர்கள் அனில் கபூர், கோவிந்தா, ராஜேஷ் கன்னா போன்றோர் நடித்திருந்தனர். இந்தியில் ‘ஓ சாத் தின்’ என்ற பெயரில் வெளியான ‘அந்த 7 நாட்கள்’, தவிர ‘பேட்டா’ என்ற பெயரில் வெளியான ‘எங்க சின்ன ராசா’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன.

‘தமிழ் திரையுலகில் எனது கலை வாரிசு என்று கே.பாக்யராஜை அறிவிக்கிறேன்’ என்று, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சொன்னார். ‘தாவணிக் கனவுகள்’ என்ற படத்தில் சிவாஜி கணேசனை இயக்கி, அவருடன் இணைந்து நடித்தார். பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கே.பாக்யராஜ், கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர். அவர் எழுதி இயக்கிய படங்களும், இயக்கி நடித்த படங்களும் திரையுலகம் இருக்கும் வரை ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாக்யராஜின் கடைசி ஆசை
திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக தனது 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக நடத்தப்பட்ட பிரஸ்மீட்டில் பேசிய கே.பாக்யராஜ், ‘தமிழ் படவுலகில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அடுத்து ஒரு வெப்தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரது கடைசி ஆசைகள் நிறைவேறாமலே போய்விட்டது.

பாக்யராஜ் கண் தானம்
மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ், கண்தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையொட்டி மருத்துவர் குழு அவரது வீட்டுக்கு வந்துள்ளது. இதற்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செயலை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Tags : K. Bhagyaraj ,Amitabh ,Vellangoil ,Gopichettipalayam ,Erode district ,Krishnasamy ,Amaravathi ,Selvaraj ,Dhanraj ,
× RELATED தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஓரிரு...