அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் பணத்தை திருடியதாக 8 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் செலுத்தும் தினசரி காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது திருட்டு புகார் எழுந்தது. இவர்கள் பணியின் போது பணத்தையும் இதர விலையுயர்ந்த பொருட்களையும் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழியர்கள், கோயிலில் வேலைக்கு சேர்ந்த குறுகிய காலத்திலேயே அயோத்தி மற்றும் லக்னோவில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி), கடந்த பிப்ரவரி 20ம் தேதி தனது விசாரணை அறிக்கையை முதல்வர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணா மோகன் அளித்த புகாரைத் தொடர்ந்து, ராமஜென்ம பூமி போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் ராம் சங்கர் யாதவ் என்கிற டினு, லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, சுபாஷ் வஸ்தவா உள்ளிட்ட 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, லக்னோவில் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ‘பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தை ராமர் கோயில் அறக்கட்டளை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளேன்; குறிப்பாக உள்ளூர் பாஜக நிர்வாகிகளிடம் இருந்து நிலங்களை 1,000 மடங்கு கூடுதல் விலைக்கு அறக்கட்டளை வாங்கியுள்ளது’ என்று கூறினார். இந்த நில மோசடி மற்றும் ரூ. 7.5 கோடி காணிக்கை திருட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை வளையத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
